இந்தியாவில் "ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதில் தீவிரமாக இருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதற்கான சட்ட மசோதாவை கடந்த 17-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்.
முன்னதாக சபையில் இந்த மசோதாவை அமைச்சர் அர்ஜுன்ராம் அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் மனீஷ்திவாரி, தி.மு.க. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கல்யாண்பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் நின்று கடுமையாக எதிர்த்தனர்.
மசோதாவை எதிர்த்துப் பேசிய தி.மு.க. டி.ஆர்.பாலு, "ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சிக்கு எதிரானது; ஜனநாயகத்தை அழிக்கக்கூடியது. 3-ல் 2 மடங்கு பெரும்பான்மை இல்லாமல் எப்படி இந்த மசோதாவை கொண்டு வருகிறீர்கள்? மசோதாவை நாடாளுமன்றத்தின் கூட்டு நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்'' என்பதை வலியுறுத்தினார். இதே குரல்களையே எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எழுப்பியிருந் தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, டி.ஆர். பாலுவின் கோரிக்கையை ஏற்கும் வகையில், "மசோதாவை கூட்டுக் குழு விவாதத்திற்கு அனுப்பலாம்'’என்றார்.
இதனையடுத்து, மசோதாவை தாக்கல் செய்யலாமா? வேண்டாமா? என மின்னணு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குளறுபடிகள் ஏற்பட்டதால் அதற்கு எதிரான குரல்கள் எழுந்தன. உடனே, காகிதச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட்டதில், மசோதாவை தாக்கல் செய்ய ஆதரவாக 269 பேரும், எதிர்த்து 198 பேரும் வாக்களித்திருந்தனர். இதனையடுத்து மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,‘’"விரிவான விவாதங்களுக்காக நாடாளுமன்றக் கூட்டு நிலைக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார். சட்ட அமைச்சர் விரும்பினால் கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்பலாம். அங்கு அனைத்து விவாதங்களும் நடத்தப்படட்டும்''’என்றார்.
இதனையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தின் கூட்டு நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக் குழுவில், பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் 31 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். மசோதா குறித்து விரிவான விவாதங்களுடன் ஆய்வு நடத்த 90 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குழு விவாதங்களில் மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கவும், ஒருமித்த கருத்து உருவாக்கவும் பா.ஜ.க. தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளன.
ஒருமித்த கருத்தை உருவாக்க மோடி அரசாங்கம் கூட்டுக்குழுவை அமைத்துள்ளது குறித்து விசாரித்தபோது, "ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவது குறித்து கடந்த 2014-லேயே மோடி பேசியிருந்தார். அப்போது, இந்த தேர்தல் நடைமுறை பற்றி தேசிய அளவில் விவாதம் ஏற்படும். அதன்பிறகு ஒருமித்த கருத்து உருவாகும் எனச் சொன்னார். தற்போது விவாதமும் எதிர்ப்பும் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளே யும் வெளியேயும் ஒருமித்த கருத்து எதுவும் ஏற்பட வில்லை. ஒருமித்த கருத்து உருவாகாதபோது, தார்மீக அடிப்படையில் இந்த தேர்தல் முறையை கொண்டுவருவதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாத மோடி அரசு, ஒரே நாடு ஒரே தேர்தலை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
அரசியல் விமர்சகர்களோ,’"மக்களின் ஆதரவைப் பெற மத்திய பா.ஜ.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அவர்கள் பேசுவதற்கும் செயல் படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனால் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில் பா.ஜ.க. தோல்வியடைந்துவருவதால், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பு அரசியல் செய்வதைக் கடந்து வேறு எதையும் செய்ய முடிவதில்லை. இதனை மக்கள் ரசிக்கவில்லை என்கிற நிலையில், "ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை கொண்டுவருகிறார்கள். இதில் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு உத்தரவாதம் இல்லை''’என்கின்றனர்.
உலகின் ஜனநாயக நாடுகளில் வலிமையானதும் மிகப்பெரியதுமான இந்தியாவில், அடிக்கடி தேர்தல் நடப்பது ஆரோக்கியமானதாக இல்லை. தேர்தல் செலவுகளும் அதிகரித்தபடியே இருக்கிறது, நேரமும் கூடுதலாகிறது. இதையெல் லாம் தடுக்கும் வகையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையை கொண்டு வருகிறோம் என்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான காரணங்களை தொடர்ச்சியாக அடுக்கி வருகிறது பா.ஜ.க. ஆனால், ’இந்தியாவில் சர்வாதிகாரம் தலை தூக்குவதற்கு இந்த தேர்தல் நடைமுறை வழி வகுக்கும். அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய மூன்று வலிமையான அடித்தளத்துக்கும் எதிரானது” என்கின்றன தேசிய அளவிலும் மாநில அளவிலும் இருக்கின்ற பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சிகளும் ஆட்சிகளும்.
குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம், நம் நாட்டை ஒற்றை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு போய் விடும். பன்முகத்தையும் ஜனநாயகத்தையும் முற்றி லும் அழித்துவிடும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான அதிபர் தேர்தல் நடை முறையை நடத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பா.ஜ.க. செயல்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால் அரசியலமைப்பை சர்வாதிகாரத் தன்மையின் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். மாநில தேர்தல் அதன் முக்கியத் துவத்தை இழக்கும். இந்திய அரசியலமைப்பை மாற்றி அமைக்க அச்சுறுத்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை. தேர்தல் சீர்திருத்தம் என்கிற போர்வையில் திணிக்கப்படும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து நாம் போராடவேண்டும் என்று மிகக் கடுமையாக எதிர்க்கிறார். முதல்வர் ஸ்டாலினின் கருத்தையே எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் கொண்டிருக்கின்றன.
"எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல; பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள கட்சிகளும் கூட எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்புகள் அதிகம்' என்கிற கருத்தும் எதிர்க்கட்சிகளிடம் எதிரொலிக் கிறது. காரணம், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர, மக்களவையில் பா.ஜ.க.வுக்கு 362 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், மோடி தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் மொத்த எண்ணிக் கையே 293தான். அதேபோல மாநிலங்களவையிலும் (ராஜ்ய சபா) பெரும்பான்மை கிடையாது. அப்படியிருந்தும் இந்த தேர்தல் நடைமுறையை திணிக்கத் துடிக்கிறது'' பா.ஜ.க. அரசு.
பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் கூட ஆதரிக்காது என்கிற கருத்து பரவலாக எதிரொலிப்பது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’"ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்த பரிந்துரைகளை கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் 47 அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருந்தன. இதில் ஆதரவாக 32 கட்சிகளும், எதிராக 15 கட்சிகளும் கருத்து தெரிவித்திருந்தன. ஆதரவளித்த கட்சிகளில் பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளும் அடங்கும். அப்படியிருக்கையில் தோழமைக் கட்சிகள்கூட ஆதரிக்காது என்பது அர்த்தமற்ற பேச்சு'' என்கிறார்கள்.
பா.ஜ.க. என்னதான் வரிந்துகட்டினாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் உண்மை இருக்கிறது. அவர்களின் கவலை நியாயமானது. நாடாளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை "ஒரே நாடு ஒரே தேர் தல்' அழித்துவிடும் அபாயமே அதிகம் இருக்கிறது'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
மேலும் "ஒரே நாடு ஒரே தேர்தல்' கோட் பாட்டில் நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தை யும் மட்டுமே இணைக்கிறார்கள். உள்ளாட்சிகள் இணைக்கப்படவில்லை. நாடாளுமன்ற, சட்ட மன்றத் தேர்தல் நடந்து முடிந்த 100-வது நாளில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தலாம் என ராம்நாத் கோவிந்த் கமிட்டி பரிந்துரைக்கிறது. அப்போது மட்டும் செலவுகளும், நேர விரயமும் அதிகரிக்காதா? நாட்டில் ஒரே வரி விகிதம் என ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திவிட்டு... வருமானவரி, தொழில்வரி, சுங்கவரி, சாலைவரி உள்பட பல வரி களை வசூலிப்பது போல இருக்கிறது இந்த தேர்தல் நடைமுறை.
இன்னும் சொல்லப்போனால், சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சியை ஆதரித்து ஆட்சி அமைக்கத் தீர்ப்பளிக்கும் மக்கள், அந்த ஆட்சி பிடிக்கவில்லையெனில், நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சியை தோற்கடிப்பார்கள். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சியை ஆதரித்து அவர்களின் செயல்பாடுகள் மக்கள் விரோதமாக இருந்தால், சட்ட மன்றத்தில் தோற்கடிப்பார்கள். இந்த உரிமையை "ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை பறிக்கிறது.
அதாவது, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தப்படும் கட்சி, மக்களுக்கு விரோதமாக நடந்துகொண்டால் அவர்களை விலக்க, மீண்டும் மக்கள் 5 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும். தேர்தல் என்பது ஜனநாய கம். அந்த தேர்தல் தனித்தனியாக நடக்கும்போதும், அடிக்கடி நடக்கும் போதும்தான் மக்களின் வாக்குகள் மீது அரசியல் கட்சிகளுக்கு பயமும் மரியாதையும் இருக்கும்''”என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் அச்சமும், குரலும் நியாயமானவையே என்ற கருத்துதான் மக்களிடமும் பெரும்பான்மை யாக எதிரொலிக்கிறது.